GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 31 மே, 2019

புழல் மத்திய சிறை - 2ல் ஆண் செவிலியர் உதவியாளர், லாரி ஓட்டுனர், துப்புரவு பணியாளர், நாவிதர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நாவிதர் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். லாரி ஓட்டுனர் பணிக்கு கனரக ஓட்டுனர் உரிமத்துடன் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் பயிற்சியுடன் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சிறை கண்காணிப்பாளர் புழல் மத்திய சிறை - 2 (விசாரணை) புழல் சென்னை - 600 066 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த தகவலை சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

தமிழக மின் வாரியத்தில் 5000 'கேங்மேன்' பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

.மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள மின் வாரியம் 'கேங்மேன்' என்ற பதவியில் 5000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு. தேர்வுக்கு மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏப்ரல் 24ல் துவங்கியது. கடைசி நாள் மே 30 என அறிவிக்கப்பட்டது.இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 17ம் தேதி வரையும்; தேர்வு கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 19ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.மின் வாரியம் 'எலக்ட்ரிகல்' பிரிவில் 300; 'சிவில்' பிரிவில் 25 என மொத்தம் 325 உதவி பொறியாளர்களை நியமிக்க 2018 டிசம்பரில் எழுத்து தேர்வு நடத்தியது. அதில் வேலைக்கு தேர்வானவர்களின் விபரம் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு துறைகளில் 424 உதவி இன்ஜினியர் பணியிடம் உள்பட 475 காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வழியாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் உதவி இன்ஜினியர் பணிக்கான காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.மின் ஆய்வுத்துறை உதவி ஆய்வாளர் 10; வேளாண்மை துறையில் உதவி இன்ஜினியர் 93; நீர்வள ஆதாரத்துறை சிவில் உதவி இன்ஜினியர் 120; பொது பணித்துறை சிவில் உதவி இன்ஜினியர் 73 இடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.மேலும் பொது பணித்துறை மின் பிரிவு உதவி இன்ஜினியர் 13; நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர் 123.கடல் வாரிய சிவில் உதவி இன்ஜினியர் 2; தொழிற்துறை பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குனர் 26 மற்றும் இளநிலை கட்டடவியல் வல்லுனர் 15 காலியிடங்கள் என மொத்தம் 475 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஜூன் 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கான தேர்வு ஆக. 10 காலை மற்றும் மாலையில் நடக்கிறது. விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்

ஓய்வூதியம் பெறுவோர் ஜூன் மாதத்திற்குள் கருவூலத்தில் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும்;

ஓய்வூதியம் பெறுவோர் ஜூன் மாதத்திற்குள் கருவூலத்தில் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும்; நேரில் வர இயலாதவர்கள் வாழ்வு சான்று சமர்பிக்க வேண்டும்' என அரசு அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஓய்வூதிய அலுவலகம் மாவட்ட கருவூலங்கள் சார்கருவூலங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி தங்கள் நேர்காணலை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வு சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் 28க்குள் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வந்தவர்கள் மீண்டும் வரத் தேவையில்லை.கருவூலங்களுக்கு செல்லாமல் அரசு இ - சேவை மையங்கள் வழியே www.jeevanpramaan.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வர வேண்டும். வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, வங்கி சேமிப்பு எண் சமர்பிக்காதவர்கள் உரிய நகல்களை கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும்.நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட நகல்களுடன் வாழ்வு சான்றினை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். வாழ்வு சான்றினை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.வௌிநாட்டில் வசிப்போர் இந்திய துாதரக அலுவலரிடம் வாழ்வு சான்று பெற்று சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.இந்த முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மூன்று வகை பருவத் தேர்வுகள் நடக்கும். முதல் பருவத் தேர்வுக்கு, ஒரு புத்தகம்; இரண்டாம் வகுப்புக்கு வேறு; மூன்றாம் வகுப்புக்கு, மற்றொரு புத்தகம் என, தனி தனியாக வழங்கப்படும்.ஒவ்வொரு பருவத் தேர்வு முடிந்ததும், அடுத்த பருவத்துக்கு, புதிய புத்தகம் தரப்படும். பழைய பருவ புத்தகத்தை, மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அதனால், மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைந்தது.இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒரே புத்தகம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. 
மேலும், முப்பருவ தேர்வுக்கு பதில், ஆண்டு இறுதியில் நடத்தக்கூடிய, ஒரே தேர்வு முறையும் அறிமுகமாகிறது.இந்த புதிய மாற்றம், ஜூன், 3ம் தேதி, பள்ளிகள் திறப்பு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒன்பதாம் வகுப்புக்கு, இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும். காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 3ம் தேதி 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.

மார்ச்சில் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்காதவர்கள் மற்றும் மார்ச் பொது தேர்வை எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி ஹால் டிக்கெட்வெளியிடப்படுகிறது.ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வரும் 10, 11ம் தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும்.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விபரம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


திங்கள், 20 மே, 2019

தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகார எண்களை போலியாக தயாரித்தும் சில பள்ளிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மழலையர் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழி வழி பள்ளிகளில் ஆய்வு செய்யுமாறு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 இந்த ஆய்வின்போது பள்ளிகள் தொடங்குவதற்காக வழங்கப்பட்ட தொடக்க அனுமதியையும், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகார எண்களையும் தேதி வாரியாக ஆய்வு செய்ய வேண்டும். தற்காலிக தொடர் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா, அவ்வாறு பெற்றிருந்தால் அது எந்தத் தேதியில் பெறப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும்.
 மேலும், 3 வகை அங்கீகாரங்களும் முறையாக, கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ("எமிஸ்') பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மே 20 முதல் 22 வரை மூன்று நாள்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடங்களுக்கு உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 10 முதல் பிளஸ் 2 வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்படவேண்டும். அந்த வகையில் 2013 -- 14 கல்வி ஆண்டு வரை 7,270 உபரி ஆசிரியர் பணியிடங்களை கண்டறிந்து, அரசுக்கு ஒப்படைத்தனர். தற்போது 2014 முதல் 2018 வரை உள்ள உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு இயக்குனர் பார்வைக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் மே 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.'

இக்னோ பல்கலையில் 'அட்மிஷன்' அறிவிப்பு

இக்னோ' என அழைக்கப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.படிப்பில் சேர விரும்புவோர், onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய லாம்.விண்ணப்பங்களை, ஜூலை, 15 வரை சமர்ப்பிக்கலாம்; டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை விண்ணப்பங்களை வழங்கலாம் என, பல்கலையின், சென்னை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது குறித்து, 50 ஆயிரம்ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டம், 14 ஆண்டு களுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018ல், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம்அமலுக்கு வந்தது.வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், மற்ற வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் அடங்கும்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தப்படுவதால், இந்த வகுப்புகளுக்கு மட்டும், புதிய பாடத்திட்ட பாடங்களை, விரைந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக, 10ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஜூனில், பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகம் தயாரித்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வாயிலாக, மாவட்ட வாரியாக, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகளின் ஆசிரி யர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்ட பயிற்சியில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அடுத்த கட்டங்களில், தனியார் மெட்ரிக் பள்ளிஆசிரியர்களும் பயிற்சி பெற உள்ளனர்.

நீட்' நுழைவு தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகள்; இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, 5ம் தேதி, நாடு முழுவதும் நடந்தது. 154 நகரங்களில், 2,500 தேர்வு மையங்களில், 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், 14 நகரங்களில், 188 தேர்வு மையங்களில், ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 711 பேர், நீட் தேர்வு எழுதினர்.இந்த தேர்வில், இயற்பியல், வேதியியல் பாடங்களில், தலா, 45 கேள்விகள்; உயிரியலில், 90 கேள்விகள் என, 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு கேள்விக்கு, தலா, நான்கு மதிப்பெண் வீதம், 720 மதிப்பெண்கள் பெற வேண்டும்.ஒவ்வொரு தவறான விடைக்கும், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். இந்த தேர்வில், இயற்பியல் வினாக்கள் கடினமாகவும், மற்ற பாடங்களின் கேள்விகள், எளிதாக இருந்ததாகவும், மாணவ - மாணவியர் தெரிவித்தனர். சிலர், அனைத்து கேள்விகளுமே மிக நுணுக்கமான வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.இந்நிலையில், எந்த கேள்விக்கு, எந்த பதில் சரியானது என்ற, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பை, தேசிய தேர்வு முகமை வெளியிட உள்ளது.அது, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஜூன், 5ல் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், அதற்கு முன், விடைக் குறிப்புடன் கூடிய விடைத்தாள் நகல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு உள்ள, 1.21 லட்சம், எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களுக்கு, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


வரும், 23ம் தேதி வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும். இந்த கொள்கையை பின்பற்றி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களை, பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு, கட்டணமின்றி ஒதுக்க வேண்டும்.தமிழகத்தில், இந்த திட்டம், மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவி யில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு வகுப்பில், 25 சதவீத இடங்களில், மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுவர்.இவர்கள், தங்களின் கல்வி கட்டணத்தை, பள்ளிகளில் செலுத்த வேண்டாம். அதற்கு பதில், அந்த மாணவர்கள், அதே பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு, அரசின் சார்பில் கட்டணம் வழங்கப்படும்.இந்த திட்டத்தின்படி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 22ல் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்துள்ளது.இதில், 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 1.21 லட்சம் இடங்கள், இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு ஒதுக்கப்பட உள்ளன.இவற்றில், ஒரே பள்ளிக்கு பலர் போட்டியிட்டால், அந்த இடங்களுக்கு ஏற்ப, அங்கு மட்டும் குலுக்கல் முறையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.வரும், 22ம் தேதி, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானோர் பட்டியல், வரும், 23ம் தேதி, பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும். பின், 23ம் தேதி, குலுக்கல்முறையில், மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுவழங்கப்படும்.கட்டாய கல்வி சட்டத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை விட, கூடுதலாக, ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு, வரும், 27ம் தேதி, காத்திருப்போர் விபரத்துடன், பட்டியல் வெளியிடப்பட உள்ளது.வரும், 31க்குள், இந்த மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

ஞாயிறு, 19 மே, 2019

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 'கிளாட்' உட்பட மூன்று நுழைவு தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால் குழப்பத்தில் உள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 'கிளாட்' உட்பட மூன்று நுழைவு தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால் குழப்பத்தில் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர 'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு மே 25, 26ல் நடக்கிறது. அதுபோல் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மத்திய பல்கலை, சென்னை பொருளியல் கல்லுாரி, கோவை மத்திய டெக்ஸ்டைல் தொழில்நுட்ப நிறுவன படிப்புகளில் சேர 'கியூசெட்' என்ற நுழைவு தேர்வும் மே 25, 26ல் நடக்கிறது. மேலும் சட்டப் படிப்பிற்கான 'கிளாட்' என்ற நுழைவு தேர்வும் மே 26ல் நடக்கிறது.
மாணவர்கள் கூறுகையில் ''கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி என்பதால் மூன்று தேர்வுகளுக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர். 'கிளாட்' தேர்வு முன்னதாக மே 12ல் அறிவிக்கப்பட்டு தற்போது மே 26க்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தேர்வுகள் நடப்பதால் எதை எழுதுவது என்ற குழப்பமாக உள்ளது. தேர்வு தேதிகள் மாற்றியமைக்க வேண்டும்,'' என்றனர்

சனி, 18 மே, 2019

பயமில்லா கற்றல்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாலியல் வன்முறை, மன உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது

பாலியல் வன்முறை, மன உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து குழந்தைகளுக்கு எளிதில் புரியும் விதமாக, 'பயமில்லா கற்றல்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது.மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், 5 முதல், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாலியல் வன்முறை, உடல் மற்றும் உணர்வு ரீதியான அத்துமீறலுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கிறது. 
இந்த சூழலில்,'குட் - டச்', 'பேட் -டச்' குறித்து குழந்தைகளுக்கும், குழந்தைகள் யாரோடு பழகுகின்றனர், நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் அலட்சியம் செய்யாமல், உடனடியாக காவல்துறை அல்லது, '1908' குழந்தைகள் நல உதவி எண்ணினை தொடர்பு கொள்வது குறித்தும், பெற்றோர், ஆசிரியர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உண்டாகும் உயர்கல்வி தொடர்பான சந்தேகம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கும், '14417' எனும் பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இவ்விரண்டையும் ஒன்றிணைத்து, பள்ளி குழந்தைகளுக்கு எளிதாக புரியும் விதமாக, விழிப்புணர்வு பதாகையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை மற்றும் எம்.பில். படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 20ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது

முதுகலை தமிழ் படிக்க உதவித்தொகை

.தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். வரும் 20ம் தேதியிலிருந்து ஜூன் 12 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12க்குள் வழங்க வேண்டும்; ஜூன் 19ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 - 2254 2992 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

கல்வி சேனல் ஒளிபரப்பிற்காக 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு இணை இயக்குனர் நாகராஜமுருகன் தகவல்



"தமிழக கல்வித்துறை சார்பில் துவங்கப்படும் கல்வி சேனல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவுற்று, 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது" என இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:மாநிலத்தில் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவேற்றப் பணிகள் 90 சதவீதம் முடிவுற்றது. இக்கல்வியாண்டு முதல் எமிஸ் மூலமே பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பள்ளி மற்றும் மாணவர் விவரம் தொடர்பான புதிய தகவல்களை தலைமையாசிரியர் அவ்வப்போது பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவரின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் துவக்கவுள்ள கல்வி சேனல் பணிகள் நிறைவுற்றன. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் எட்டாவது தளத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேவையான காட்சியரங்கு, ஒளிப்பதிவு கூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் தயார் நிலையில் உள்ளன.இதன் மூலம் கற்றல் மற்றும் மாணவர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படும். காலை 5:30 மணிக்கு 'குறளின் குரல்' என்ற தலைப்பில் திருக்குறள் பற்றிய விளக்கவுரையுடன் நிகழ்ச்சி துவங்கி பாடங்கள் தொடர்பான அனிமேஷன் விளக்கப் படம், கல்வித்துறை முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும் 'நாள் குறிப்பு', உலக நிகழ்வை தொகுத்து வழங்கும் 'இந்த நாள் இனிய நாள்', சாதனை ஆசிரியர்களை கவுரவிக்க 'குருவே துணை' உட்பட 30 தலைப்புகளில் முதற்கட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படும்.அரசு செட்டாப் பாக்ஸில் 200வது சேனலாக உள்ளது. தமிழகத்தில் 53 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் இச்சேனலை மாணவர் பார்க்கும் வகையில் கேபிள் இணைக்கும் பணிகள் நடக்கின்றன. மாவட்டங்கள் தோறும் மீடியா ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே 23 ம் தேதிக்கு பின் சேனல் துவக்க விழா நடக்கும் என்றார்.


கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை) பதிவேற்றம் இன்னமும் முடிந்தபாடில்லை.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு 'அப்டேஷன்' கொடுக்கப்படுவதால், கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை) பதிவேற்றம் இன்னமும் முடிந்தபாடில்லை.மாணவர் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து விபரங்களும் அடங்கிய 'எமிஸ்' பதிவேற்றத்தில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பதிவேற்றம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. திட்டம் தொடங்கியபோது கணினி, இணைய வசதி இல்லாததால், பள்ளிகள் இதில் அதிகம் அக்கறை காட்டவில்லை.தற்போது மாணவர்களுக்கு 'டிசி', ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, நலத்திட்டங்கள் என அனைத்தும் 'எமிஸ்' வழியே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நடப்பாண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது பள்ளி கல்வி துறை.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 2011-ம் ஆண்டு எமிஸ் பதிவேற்றம் தொடங்கினாலும், 2013-ம் ஆண்டில்தான் ஆசிரியர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் பெயர், பள்ளி, வகுப்பு என ஒரு சில விபரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு 'அப்டேஷன்களை' கொடுத்து கொண்டே இருப்பதால் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. மாவட்ட அதிகாரிகள் 90 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினாலும், 70 சதவீத பணிகளே முடிந்துள்ளன.தற்போது மாணவர்களின் ஆதார் எண், அங்க அடையாளங்கள், தாயார் பெயர், ரத்த வகை என பல்வேறு வகை விபரங்களை பதிவேற்றம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். இன்னும் எதையெல்லாம் 'அப்டேஷன்' செய்ய சொல்ல போகின்றனரோ தெரியவில்லை, என்றார்.

கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

'.தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் பொது தேர்வுகள் முடிந்தன; ஏப்ரலில் பள்ளி இறுதி தேர்வுகள் நடந்தன. ஏப்., 12 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்னும் இரண்டு வாரங்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை, சீர் செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், பராமரிப்பு பணிகளுடன், சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களுக்கு உகந்த சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில், மாணவர்களின் வகுப்புகள் துவங்கும் அளவுக்கு, அனைத்து முன் ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.