GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 21 ஜூலை, 2018

சி.ஏ., படிப்புக்கான அடிப்படை, முதன்மை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.

சி.ஏ., படிப்புக்கான அடிப்படை, முதன்மை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' என்ற, சி.ஏ., படிப்புக்கான தேர்வுகள், மே மாதம் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகளை, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., நேற்று வெளியிட்டது. இதில், சி.ஏ., இறுதி தேர்வில், பழைய முறை தேர்வு; புதிய முறை தேர்வு என, இரண்டு தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பழைய முறைப்படியான தேர்வில், 9.09 சதவீதம் பேரும், புதிய முறைப்படி நடந்த தேர்வில், 9.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இறுதி தேர்வுகளில், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் மாணவர்கள் முதலிடமும், அகமதாபாத், பெங்களூர் மாணவர்கள், இரண்டாமிடமும், சூரத் மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர்.அதேபோல், அடிப்படை தேர்வு மற்றும் பொது திறன் தேர்வான, சி.பி.டி., ஆகியவற்றுக்கும், தேர்வு முடிவு வெளியானது. பொது திறன் தேர்வில், 28.06 சதவீதமும், அடிப்படை தேர்வில், 19.24 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பட்டய கணக்காளர் - சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில்,கோவை, வேடப்பட்டியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், 400க்கு, 288 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 21வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை உள்ளன. முதற்கட்டமாக மலையாளம் தவிர்த்து, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப பாட புத்தகங்களை கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உதவியுடன் வெளியிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் நிதியையும் பெற்றுள்ளது. அதனை பயிற்றுவிக்க மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட, தமிழ் தெரிந்த ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் அங்கீகாரம்: சி.பி.எஸ்.இ.,க்கு கட்டாயம்

'அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற்று, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை பின்பற்ற வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகள், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் வராமல், 'டிமிக்கி' கொடுத்து வந்தன. தன்னிச்சைசி.பி.எஸ்.இ., அதிகாரிகள், அங்கீகார பிரச்னையை கவனிக்கும் அதிகாரம், தங்களுக்கு இல்லை என்று கூறிய நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் வராமல், தன்னிச்சையாக செயல்பட்டு வந்தன.அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிக கல்வி கட்டணம், உள்கட்டமைப்பு கோளாறு, மாணவர்களுக்கான வசதிகள் பற்றாக்குறை என, பல பிரச்னைகள் ஏற்பட்டன. அதேபோல், தமிழக அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப மாணவர்களுக்கு, 25 சதவீத இலவச இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை எச்சரித்து, பல்வேறு முறை, தமிழக பள்ளிக் கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. மேலும், 'ஒவ்வொரு பள்ளியும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, தடையில்லா சான்று பெறுவதும், அங்கீகாரம் வாங்குவதும் அவசியம்' என, பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு துவங்கியதும், சி.பி.எஸ்.இ., வாரியம் தரப்பில், பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இதில், 'மாநில அரசின் விதிகளையும், அங்கீகாரத்தையும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறக் கூடாது' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தங்களது மாநில அரசின் கல்வித் துறையிடம் அங்கீகாரம் பெற்று, அதன் நகலை, வைத்திருக்க வேண்டும். மாநில அரசின் அங்கீகாரம் பெறாதவர்கள், உடனடியாக பெற வேண்டும். மாநில அரசுகளின் விதிகளின்படி, அங்கீகாரம் இல்லாத இடங்களில், கல்வி நிறுவனம் நடத்தக் கூடாது. அரசுத் துறைகளின் உரிய அனுமதியின்றி, பள்ளியை இயக்க கூடாது.அனைத்து பள்ளிகளுக்கும், தேசிய கட்டட விதிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை விதிகளுக்கு உட்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசிடம், தீ தடுப்பு பாதுகாப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி சான்றிதழ், கட்டட உறுதி சான்றிதழ் போன்றவற்றையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். சட்டப்பூர்வ நடவடிக்கைஅந்தந்த மாநிலங்கள் இயற்றியுள்ள, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், அனைத்து விதிளையும் பின்பற்றி நடக்க வேண்டும்.இந்த விதிகள் குறித்து, பள்ளி நிர்வாகத்தினரிடம், பள்ளியின் தலைமை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் பள்ளிகளை இயக்கினால், அந்த பள்ளிகள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளிக்கான, சி.பி.எஸ்.இ., இணைப்பு, ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 ஜூலை, 2018

அனைத்து பள்ளிகளிலும் தியானம், யோகா பயிற்சி: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

'சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, 5 நிமிடம் தியானம், 15 நிமிடம் யோகா பயிற்சி வழங்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் வருவாய் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், 1,500க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படித்து வரும் மாணவர்களுக்கு பள்ளிச்செயல்பாடுகளுடன், தியானம், யோகா பயிற்சி ஆகியவை தினமும் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை பள்ளிகளிலும், 5 நிமிடம் தியானம், மதிய உணவு இடைவேளைக்கு, 30 நிமிடங்களுக்கு முன், 15 நிமிட யோகா பயிற்சி ஆகியவை, பள்ளி இணை செயல்பாடுகளாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு, மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அரசியல், மத ரீதியான அணுகுமுறை இருத்தல் கூடாது. அன்றாட கற்றல், கற்பித்தல் பணிக்கு பாதிப்பின்றி, பயிற்சி வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர் முன்னிலையில், பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன, 'ஆதார்' கார்டை மறுபடியும் பெற்று கொள்ள முடியும்.

காணாமல் போன, 'ஆதார்' கார்டை, '1947' என்ற தொலைபேசி எண் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ள முடியும்.மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், புகைப்படம், விழி, விரல் ரேகை உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய, 'ஆதார்' அட்டையை வழங்கி வருகிறது. புதிதாக வங்கி கணக்கு துவக்குவது, ரேஷன் கார்டு பெறுவது என, அரசின் அனை த்து சேவைகளையும் பெறுவதற்கு, ஆதார் கார்டு அவசியம்.சிலர், அந்த கார்டை தொலைத்து விடுவதுடன், ஆதார் எண்ணும் தெரியாததால், மாற்று கார்டு வாங்க சிரமப்படுகின்றனர். இதற்காக, இடைத்தரகர்களை நாடி, பணமும் செலவு செய்கின்றனர். காணாமல் போன, ஆதார் கார்டை, '1947' என்ற, நுகர்வோர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைப்பதன் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ளலாம்.ஆதார் எண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதன்படி, 1947 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து, தமிழில் பேசுவதற்கு, அவர்கள் சொல்லும் எண்ணை, போனில் அழுத்த வேண்டும். பின், உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி சொன்னால், ஆதார் எண்ணை கண்டுபிடித்து, உங்களுக்கு அனுப்புவர்

சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர்

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.

குரூப் 1 தேர்வுகளுக்கு, இனி குறைந்தபட்ச வயது, 21 ஆகவும், அதிகபட்ச வயது, பொது பிரிவினருக்கு, 32 ஆகவும், மற்றவர்களுக்கு, 37ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

குரூப் 1 தேர்வுகளுக்கு, இனி குறைந்தபட்ச வயது, 21 ஆகவும், அதிகபட்ச வயது, பொது பிரிவினருக்கு, 32 ஆகவும், மற்றவர்களுக்கு, 37ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையால், குரூப் 1ல் உள்ள, டி.எஸ்.பி., துணை கலெக்டர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட கலெக்டரின் உதவியாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், தீயணைப்பு கோட்ட அதிகாரி, வணிக வரி உதவி கமிஷனர் மற்றும் கூட்டுறவு துணை பதிவாளர் ஆகிய பதவிகளுக்கு, வயது வரம்பு உயர்ந்துள்ளது. குரூப் 1 ஏ பிரிவில், உதவி வன பாதுகாவலர், குரூப் 1 பி பிரிவில், அறநிலையத் துறை உதவி கமிஷனர் ஆகிய பதவிகளுக்கும், கூடுதல் வயது வரம்பில், தேர்வு எழுத வாய்ப்புகள் கிடைக்கும்

வியாழன், 19 ஜூலை, 2018

5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல் பாஸ்) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது தடவையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் வழக்கமான தேர்வு நடத்தப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகளுக்கு 2 மாதங்கள் கழித்து மறுதேர்வு நடத்தப்படும்.

அந்த மறுதேர்விலும் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளை ‘பெயில்’ ஆக்கி, மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

கல்வித்தரம் தாழ்ந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது கல்விமுறை சீரழிந்து விட்டது, அதை மறுகட்டுமானம் செய்ய வேண்டும். ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், பெற்றோர், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தின. எனவே, நீண்ட சிந்தனைக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.

இருப்பினும், அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா? வேண்டாமா? என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதுபோல், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எப்படி நடத்துவது என்பதையும் மாநிலங்களே முடிவு செய்யலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் மத்திய அரசு அளிக்கும்.

தோல்வி அடைந்தாலும், எந்த மாணவரும் பள்ளியை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்

அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், உயர்கல்வி படிப்பது, வெளிநாடு செல்வது, சொத்துகள் வாங்குவது, அரசின் பிற துறைகளின் வேலைக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு, நியமன அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.இதன்படி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்து, அனுமதி பெற்று வந்தனர். பள்ளிக்கல்வி துறையில், தற்போது நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டதால், சி.இ.ஓ.க்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.எனவே, உயர்கல்வி படிப்பதற்கான அனுமதி பெறுவது, போட்டி தேர்வுகளில் பங்கேற்க அனுமதி பெறுவதற்கு, ஆசிரியர்களின் கோப்புக்களை, சி.இ.ஓ.,க்களே ஆய்வு செய்து, விதிப்படி அனுமதி வழங்கலாம் என, பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களின், 'எமிஸ்' டிஜிட்டல் விபரங்களுக்கான பதிவை மேற்கொள்ள ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்களின், 'எமிஸ்' டிஜிட்டல் விபரங்களுக்கான பதிவை மேற்கொள்ள ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில், போலியை தடுக்கும் வகையில் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை டிஜிட்டல் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, ரத்தப்பிரிவு, ஆதார் எண், அலைபேசி எண் உள்பட பல்வேறு விபரங்களை, எமிஸ் இணையத்தில் பதிவு செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், இந்த விபரங்களை, மாணவர்களின் வகுப்புக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இதன்படி இந்த ஆண்டு ஜூலை 15க்குள் எமிஸ் விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது.மாணவர் சேர்க்கை தொடரும் நிலையில், ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு, புதிய பாடத்திட்ட பயிற்சி போன்ற கூடுதல் சுமைகள் உள்ளதால், எமிஸ் பதிவு பணிகளுக்கு, வரும் 31ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஐ போன்' பயன்படுத்துவோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல்

ஐ போன்' பயன்படுத்துவோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,' என, சைபர் கிரைம் போலீசார், மாவட்ட இணைய வழி குற்றங்களை கண்காணிக்கும் பிரிவு போலீசாரை உஷார் படுத்தி உள்ளனர்.இந்திய உளவுத் துறைக்கு கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த (டேட்டா கேட்சர்) தகவல்களை திருடும் நிபுணர்கள், இந்தியாவில் ' ஐ- போன் ' பயன்பாட்டாளர்களான தொழிலதிபர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய நபர்களின் தகவல்களை விசேஷ மென்பொருள் மூலம் திருடும் கும்பல் குறித்து தகவல் கிடைத்து உள்ளது. இதனால் மாநில சைபர் கிரைம் போலீசார், மாவட்ட சைபர் கிரைம் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகளை உஷார் படுத்தி உள்ளனர்.இந்த ஐ-போன் 'ஹை ஜாக் கேக்கர்ஸ்' தொழில்நுட்பம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'முதற்கட்டமாக முக்கிய நபர்கள் பயன்படுத்தும் 13 ஐ-போன்களின் தகவல்கள் வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஐ-போன் பாதுகாப்பாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தவறான, தேவையற்ற எஸ்.எம்.எஸ்., இணைப்புக்கள், தேடுதல் குறித்த இணைய வழி குறிப்புக்களை பதிவிறக்கம் செய்வதையோ, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்புகளையோ பயன்படுத்த வேண்டாம்.மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து முன் எச்சரிக்கையாக புகார் அளிக்கலாம்,' என்றனர்.

மொபைல் ஆப் மூலம் எந்த புத்தகம் எந்த நூலகத்தில் உள்ளது என அறியலாம்

எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, 'மொபைல் ஆப்' வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை, பொது நுாலகத்துறையின் இயக்குனர், ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி, அனைத்து நுாலகங்களின் விபரங்களும், மின்னணு பதிவு தொகுப்பாக மாற்றப்படுகிறது. மாவட்ட மைய நுாலகங்களில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கும் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, தேவநேய பாவாணர் நுாலகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல், கிளை நுாலகங்கள் வரையிலும், நுாலகங்களின் பணிகளை நவீனப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நுாலகங்களை இணைக்கும், 'மொபைல் ஆப்' தயார் செய்யப்படுகிறது. புத்தக வாசிப்பாளர்கள், ஏதாவது முக்கியமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், அந்த புத்தகம் எந்த நுாலகத்தில் உள்ளது என்பதை, மொபைல் ஆப் வழியாக தெரிந்து கொள்ளலாம்.அனைத்து நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகள், எழுதியவர், பதிப்பு, பதிப்பாளர் போன்ற விபரங்கள், இந்த, 'ஆப்'பில் இடம் பெறும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை, எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொது நுாலகத்துறை மேற்கொண்டுள்ளது.-

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுஉள்ளது.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, நாளை, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுஉள்ளது.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தள்ளி வைப்புசிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்டோருக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் மட்டும், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதன், 18 ஜூலை, 2018

புதிய பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 99 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்திலிருந்து, அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 99 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த உதயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த கல்வி ஆண்டு முதல், 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடப் புத்தகம் சிபிஎஸ்இ, எஸ்சிஆர்டி உள்ளிட்ட பிற மாநில பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமாகத் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத் திட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொழில்நுட்பம் இழையோடுகிறது.
அகில இந்திய அளவில், தமிழகம்தான் இந்தப் பாடப் புத்தக விரைவுக் குறியீடுகளை இணைய வழியில் பயன்படுத்தி, புதிய பாடத் திட்டத்தை பொதுமக்கள், மாணவர்களிடையே கொண்டு சேர்த்ததில் முன்னிலை பெற்றுள்ளது. சராசரியாக நாளுக்கு 2 லட்சம் பேர் காணொலி காட்சி வாயிலாகப் பார்த்து, கற்று மகிழ்ந்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில், பிளஸ் 1 புதிய பாடத் திட்டம், பிளஸ் 2 பாடத் திட்டத்திலிருந்து 99 சதவீத கேள்விகள் இடம் பெற்றுள்ளன. புதிய பாடத் திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
புதிய பாடத் திட்டத்தை மாணவர்கள் முழுமையாகப் படிப்பதுடன், ஆசிரியர்களும் கற்பிக்க உழைக்கும் பட்சத்தில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில், அகில இந்திய அளவில் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றியைக் குவிப்பர். பாடப் புத்தகங்களை இன்னும் சிறப்பாக மாணவர்களிடம் எடுத்துச் செல்ல தமிழகம் முழுவதும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்கவும், கல்வியை மேம்படுத்தவும் இந்த பயிற்சிகள் பயன்பெறும். ஆசிரியர்கள் இதற்கான தகுதியைப் பெற தொடர் பயிற்சி வழங்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமன்றி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பாடப் புத்தகமும் 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைத்துள்ளதால், ஆசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்றார்