GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 31 ஜனவரி, 2015

TNPSC தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது

தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ளடி என்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதாரத்துறை அதிகாரி, தொழிலாளர் நலத்துறை அதிகாரி, வேளாண் துறை துணை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பபடும் என்றும் அவர் தெரிவித்தார். 2014 - 15 ஆம் ஆண்டில் 14ஆயிரத்து 252 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் பால சுப்பிரமணியன் கூறினார்.
குரூப் - 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர் கடந்தாண்டு தேர்வு முறையே இந்தாண்டும் பின்பற்றப்படும் என்றார். உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் பின்பற்றப்படுவதாகவும் பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொதுத்தேர்வுகளில் பிட் அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடை

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், பிட் அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதாக, அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசுத்தேர்வுத்துறை கடந்த ஆண்டில் முறைகேடுகளை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நடப்பு கல்வியாண்டிலும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த, இறுதிகட்ட ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு, புத்தகம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஓராண்டு தடையும்; துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல், சக மாணவர்களின் உதவியை நாடுதல் போன்றவற்றுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும் விதிப்பது, அமலில் இருந்து வருகிறது.
மேலும், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், தரக்குறைவாக நடந்துகொள்ளும் மாணவர்களுக்கும், சக மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி எழுதும் மாணவர்களுக்கும் ஆயுள் தடை விதிப்பது மட்டுமின்றி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஓராண்டு, இரண்டு ஆண்டு தடைவிதிப்பது நடைமுறையில் உள்ளது. வாழ்நாள் தடை சார்ந்த தகவல்கள் இதுவரை இல்லை. தற்போது, இதுசார்ந்த சுற்றறிக்கையும் வரவில்லை" என்றார்.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தகவல்கள் தெரிவிக்கப்படும். தற்போது, இதுசார்ந்த தகவல்கள் தெரிவிக்க இயலாது. தேர்வு சார்ந்த செயல்பாடுகள் நடந்து வருகின்றன" என்றார்.

RTE அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது.
சமூகத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள், பள்ளி சேர்க்கையின்போது, 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அடிப்படைக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பிரசாரம் செய்ய, தமிழகம் முழுவதும் கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குழுக்கள் குறித்து ஆய்வறிக்கை அனுப்ப, 32 மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர்களால் கண்டறியப்பட்ட, பதிவு பெற்ற கலைக் குழுக்களின் பட்டியல், திட்ட இயக்குனருக்கு அனுப்பப்பட்டது.
இக்குழுக்களை மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுத்த, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும், 385 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவு பெற்ற கலைக்குழுக்களைச் சேர்ந்த 200 பேர், அடிப்படைக் கல்வி, சட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழன், 29 ஜனவரி, 2015

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் - சுப்ரீம் கோர்ட்

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா பந்த் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: பள்ளிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பெயரளவிலான கழிப்பறைகள் இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது.
இருபாலர் பள்ளியிலும், பெண்கள் பள்ளியிலும் கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுகின்றன. போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும், முழு வசதிகளுடனான கழிப்பறைகள் இருப்பது அவசியம். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29ம்தேதி முதல் பிப்ரவரி முதல்தேதிவரை

உலகத் தமிழ்பண்பாடு இயக்கம் சார்பில் மலேசியா கோலாலம்பூரில் 9வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29ம்தேதி முதல் பிப்ரவரி முதல்தேதிவரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் உலக அளவிலான தமிழ் அமைப்புகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என தமிழ் அறிஞர்கள் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உதவி பேராசிரியரும், ஜனாதிபதியிடம் இளம் அறிஞர் விருதுபெற்ற சோ. முத்தமிழ்ச்செல்வன், வாயில் மறுத்தல் நிலையில் தலைவி என்ற தலைப்பில் கட்டுரை சமர்பித்து வாசிக்கிறார்.

அஞ்சலக உதவியாளர் தேர்வு முடிவுகள் எப்போது?

 தபால்துறை சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 1,179 அஞ்சலக உதவியாளர் (போஸ்டல் அசிஸ்டென்ட்) பணியிடங்களுக்கு, முதல்கட்ட தேர்வுகள், கடந்தாண்டு மே 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களில், 3 ஆயிரத்து 700 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்தாண்டு செப்., மாதம் இரண்டாம் கட்ட தேர்வாக, கம்ப்யூட்டர் திறன் தேர்வு(தட்டச்சு) நடத்தப்பட்டது. தேர்வு நடத்தப்பட்டு, பல மாதங்களான நிலையில், தமிழகத்தில் மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.
பிற மாநிலங்களில், இதே பதவிக்கு நடந்த தேர்வில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சியில் உள்ளனர். இறுதி முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், வேறு பணிக்கும் செல்ல முடியாமல் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இறுதி தேர்வு எழுதி காத்திருப்போர், தமிழகத்திற்கு பிறகு மற்ற மாநிலங்களில் தேர்வு நடத்தி, முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்வு பெற்றவர்கள் வேலைக்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.
ஆனால், தமிழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, டில்லி அஞ்சல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், "தேர்வு முடிவுகளை, சென்னை அஞ்சல் துறைக்கு அனுப்பி ஒரு மாதம் ஆகிவிட்டது என்று தெரிவிக்கின்றனர். சென்னை அதிகாரிகள், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்" என்றனர்.
மண்டல தபால் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "இத்துறையில் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பு, தனியார் ஏஜன்சியிடம் வழங்கப்பட்டது. அவர்கள் தேர்வு முடிவை சென்னை தலைமை அலுவலகத்தில் கொடுத்து விடுவர். தலைமை அலுவலகம்தான், தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்" என்றனர்.

ஓவியத்திற்கான கின்னஸ் உலக சாதனை !

MIDAS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Marg Institute of Design and Architecture, Swarnabhoomi -ல், நடைபெறும் நாசா 2015 கருத்தரங்கில், உலகின் மிகப்பெரிய படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. MIDAS என்பது ஸ்வர்ணபூமி கல்வி நிலையங்களுள் ஒன்றாகும்.
இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து, 6000க்கும் அதிகமான பிரதிநிதிகளும், கட்டடக் கலை மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
"மாற்றம் - இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம்" என்பதுதான் நிகழ்ச்சியின் மைய நோக்கம். இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம் என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை உருவாக்குவதே, இந்த உலக சாதனை முயற்சியின் நோக்கம்.
நாசா 2015 கருத்தரங்கம், மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதன்மூலம், கருத்துக்களைப் பரிமாறவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் வழியேற்படுகிறது. உலகளவில், பிரபலமான கட்டடக்கலை வல்லுநர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
கட்டடக்கலை தொடர்பாக, பல்வேறு தலைப்புகளில், விரிவுரைகள், குழு விவாதங்கள் மற்றும் பயிலரங்குகள் நடைபெறும்.
விரிவான விபரங்களுக்கு sreeni@brand-comm.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க.

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ

 புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.
மேலும், அனுமதி பெறாமல், கல்வி நிறுவனங்கள் இயங்கக்கூடாது என, வலியுறுத்தி உள்ளது. புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., இடையே, பனிப்போர் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு, இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு வர, மேற்கூறிய பொறுப்புகளை, ஏ.ஐ.சி.டி.இ., கண்காணிக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவு அடிப்படையில், இந்த ஆண்டில், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்கவும், ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களில், இடமாற்றம், கூடுதல் படிப்புகள் துவக்குவது போன்றவற்றில், கல்வி நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.
மேலும், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்க, பின்பற்ற வேண்டிய விதிகள் அடங்கிய கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், கல்வி நிறுவனங்கள் துவக்க தேவையான இட வசதி, கட்டண விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில், பின்பற்ற வேண்டியவை குறித்து கூறப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல், எந்த தொழில்நுட்பமும், மேலாண்மை, பொறியியல் கல்வி நிறுவனமும் இயங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி உள்ளது.

புதன், 28 ஜனவரி, 2015

இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசின், பத்ம விபூஷண் விருதுபெற்ற -எம்.ஆர்.சீனிவாசன்

 இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசின், பத்ம விபூஷண் விருதுபெற்ற எம்.ஆர்.சீனிவாசன் கூறினார்.
இந்திய அணு மின் சக்தி கழக முன்னாள் தலைவரும், கூடங்குளம் அணுமின் நிலைய ஆலோசனை கமிட்டி தலைவருமான, எம்.ஆர்.சீனிவாசனுக்கு, 85, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வசித்து வரும் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மிக நீண்ட இடைவெளிக்கு பின், அணுசக்தி துறை சார்ந்து, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அணுசக்தி துறை என்பது, சவாலானது. இளைஞர்கள், அதிகளவில், ஆராய்ச்சி துறையில் முன்னேற வேண்டும்.
இத்தகைய ஊக்குவிப்புகளை, இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்க வேண்டும். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா இடையேயான, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நன்மை பயக்கும். இவ்வாறு எம்.ஆர்.சீனிவாசன் கூறினார்.
கடந்த, 1930, ஜன., 5ம் தேதி, பெங்களூருவில் பிறந்த, மாலூர் ராமசாமி சீனிவாசன், மெக்கானிக்கல் பொறியியல், அணுசக்தி பொறியியல் படித்துள்ளார். கடந்த, 1955ல், இந்திய அணுசக்தி துறையில் இணைந்து, டாக்டர் ஹோமி பாபாவின், முதல் அணுசக்தி ஆய்வில், தன்னை இணைத்து கொண்டார். 1959ல், இந்தியாவின் முதல் அணுசக்தி நிலைய கட்டுமான பணியின், முதன்மை திட்ட பொறியாளராக செயல்பட்டார்.
அணுசக்தி கழக தலைவர், அணுசக்தி கமிஷன் தலைவர், அணுசக்தி துறை செயலர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது சேவையை பாராட்டி, 1984ல், பத்மஸ்ரீ 1990ல், பத்ம பூஷண் விருதுகளை பெற்றார். 1992ல், பணி ஓய்வுக்கு பின், ஊட்டியில் தங்கியுள்ளார். அதன்பின், மாநில அரசின் அழைப்பை ஏற்று, கூடங்குளம் அணுமின் நிலைய ஆலோசனை கமிட்டி தலைவராக செயல்பட்டார்

அரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம்

அரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
தமிழகத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், ஒழுக்கம், பல்திறன் வெளிப்பாடு என, பெற்றோர் மத்தியில் கவர்ச்சிகரமான பல விஷயங்கள் காணப்படுகின்றன.
இந்த சூழலுக்கு, அரசு பள்ளிகளும் மாறவேண்டிய காலகட்டத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் துண்டு பிரசுரம் வினியோகிப்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அரசு எடுக்கும் நடவடிக்கையாக உள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை என, பல வகைகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளால் போட்டி போட முடிவதில்லை.
அதற்கான முயற்சிகளும் அரசு பள்ளிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. இப்படி முடங்கும் அரசு பள்ளிகளை, அரசும் கைகொடுத்து தூக்கி விட தயாராக இல்லை என்பதை, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சுதந்திர, குடியரசு தினவிழாக்களின் கலை நிகழ்ச்சிகள் அம்பலமாக்கி வருகின்றன.
* நேற்று(ஜனவரி 26) சென்னை தலைமை செயலகத்தில் நடந்த, குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி மட்டுமே இடம் பெற்றிருந்தது.
* சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி கூட இடம் பெறவில்லை. ஆனால், சென்னை மாவட்டத்தில், 27 அரசு பள்ளிகள், 10 அரசு ஆதி திராவிடர் நல பள்ளிகள், மழலையர் பள்ளிகள் உட்பட, 314 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வாகவே உள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் அசத்தும் திறன், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லையா? அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அரசு பள்ளிகளை பார்க்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை எப்படி அரசு பள்ளிகளில் மனமுவந்து சேர்ப்பர் என்பதே பொதுவான கேள்வியாக உள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடியரசு, சுதந்திர தின விழாக்கள் மட்டுமின்றி, பொதுவான அரசு விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள பள்ளிகளை வரவேற்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் அளவிற்கு, அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பள்ளி கல்வித்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் முன்வந்து, மாணவர்களை களம் இறக்கினால், நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாட போகிறோம்? இவ்வாறு, அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.
வாய்ப்பு கிடைப்பதில்லை
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூலி தொழிலாளிகள் கூட, தங்கள் குழந்தைகள் கலர் சட்டை அணிந்து, வேடங்கள் அணிந்து, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். இது மாணவர்களின் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பு பெரும்பாலான அரசு பள்ளிகளில் கிடைப்பது இல்லை.

இதற்கு முதலில் பள்ளிகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் தான் தயார்படுத்த வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால்தானே, மாணவர்களை இதுபோன்ற விஷயங்களுக்கு தயார்படுத்த முடியும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்

ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
புள்ளி விவரம்:

’யுனெஸ்கோ’ எனப்படும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு மற்றும் ’யுனிசெப்’ எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2000 - 2012 வரை, தெற்காசியாவில், பள்ளி செல்லா குழந்தைகளாக இருந்தவர்களில், 2.3 கோடி பேர், பள்ளிகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர்; அவர்களில், 1.6 கோடி பேர் இந்திய குழந்தைகள் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்களாவன:

* இந்தியாவில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும், 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலேயே உள்ளன.

* உலகில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு, சிறிய நாடுகளின் பங்களிப்பு தான் அதிகம்.

* அல்ஜீரியா, புருண்டி, கம்போடியா, கானா, இந்தியா, ஈரான், மொராக்கோ, நேபாளம் போன்ற, 42 நாடுகளில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, இந்த, 12 ஆண்டுகளில், பாதியளவு குறைந்துள்ளது.

10 சதவீத சிறுமியர்

* எனினும், 2012ல், உலகம் முழுவதும் உள்ள சிறுவர், சிறுமியரில், 8 சதவீத சிறுவர்களும், 10 சதவீத சிறுமியரும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அதாவது, 5.8 கோடி சிறுவர்; 3.1 கோடி சிறுமியர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பது, உண்மையில் அதிர்ச்சிகரமான தகவலே.

குறைப்பது எப்படி?

பள்ளி செல்லும் வயதில், பள்ளிகளில் காலடி எடுத்து வைக்காமல் உள்ள குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, பல வித திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.

* பள்ளிகளில் கட்டணங்கள் இருக்கக் கூடாது.

* பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்.

* குழந்தைகளின் பெற்றோருக்கு, பண உதவி வழங்கலாம்.

தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம் பேர் சனிக்கிழமை எழுதினர்.
இந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பள்ளிக் கல்வித் துறையிடம் முடிவுகள் ஒப்படைக்கப்படும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியது:
இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஜனவரி 25-ஆம் தேதியை, தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்று 2011-ஆம் ஆண்டிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நிகழாண்டு ஜனவரி 25-ஆம் தேதி ஐந்தாவது தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டின் மையநோக்கு, "சுலபமான பதிவு-சுலபமான திருத்தம்' என்பதாகும். 
தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில அளவிலான விழா ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள், மூன்று தேர்தல் அதிகாரிகள், ஒரு வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோருக்கு விருதுகளை ஆளுநர் வழங்குகிறார்.
மேலும், புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையையும் வழங்குகிறார் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்

கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து பணி நியமனம் செய்வதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்காக அறிவிக்கை இன்னும் 10 நாள்களில் வெளியாகும். இதன்மூலம், 11,200 பணியிடங்கள் நிரப்பப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். சில நேரங்களில் இணையதளம் சரியாக செயல்படாததால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காண்போம்.
அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வந்த தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை குறித்து பெற்றோர்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

IRTTபொறியியல் கல்லூரியில் இலவச தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி

ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் (ஐ.ஆர்.டி.டி.) இலவச தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி நடைபெறவுள்ளது. இப் பயிற்சியில் சேர பிப்.2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அக் கல்லூரியின் முதல்வர் (பொ) மயில்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக ஈரோடு அருகே சித்தோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 12 வார கால இலவச தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்றுக் கொள்கிறது.
இதுதவிர பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு சீருடையும், உணவும் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.1.2015 அன்று 18 வயதுக்கு குறையாமலும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தற்போது வேலை ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த கல்வி நிறுவனத்திலும் மாணவராகவும் இருக்கக் கூடாது.
தானியங்கி ஊர்தி மெக்கானிக் பயிற்சி கல்லூரியில் தானியங்கி ஊர்தியியல் துறை மையத்தில் நடைபெறும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர், வெள்ளை தாளில் பெயர், தந்தை பெயர், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், கல்வி தகுதி, சாதி, ரேஷன் அட்டை எண், ஆதார் அட்டை இருந்தால் அதற்குரிய எண்ணை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் கல்வி தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண் பட்டியல், கல்வி நிலைய மாற்று சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை பிப்ரவரி 2-ம் தேதிக்குள் முதல்வர், சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி, தபால் பெட்டி எண்-2, வாசவி கல்லூரி அஞ்சல், ஈரோடு-16 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு, வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதுதொடர்பான தகவல்களை 0424-2533279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது.
பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.
புண்படுத்தும் பேச்சுக்கள்
கச்சேரி சூப்பர்தான், கூட்டம்தான் இல்லை. பார்ட்டி அருமை, வந்த பார்ட்டிகள் எல்லாம் மொக்கை. பேச்சு நன்றாக இருந்தது, கேட்கத்தான் ஆளில்லை. எக்கச்சக்க ஐடெம்ஸ், எதுவும் வாயில வைக்க முடியல.
இப்படி நிறைய பேரின் பேச்சில் ஒரு குத்தல் இருக்கிறது. கேட்கும்போது பலர் சிரிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால் நிச்சயம் மனம் புண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிலருக்கு தனது பதவி, அதிகாரம் காரணமாக ஏற்படும் ஒரு உடல் விறைப்பு, கடிந்து பேசும் தன்மை என்று எல்லாமே ஞானச் செறுக்கு எனலாம். புறச்சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்யமுடியாதபோது ஏற்படும் ஒரு சலிப்பு, கவலை, பொறுமையின்மை வார்த்தையாக வெளிப்படும்போது, பல இதயங்கள் நொறுங்கிப் போகின்றன.
‘வலி’ தரும் வார்த்தைகள்
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை மட்டுமல்ல, வலி தருவதும்கூட. சில தவறான வார்த்தைகள், கேட்டவுடனேயே இதயத்தை நொறுக்குகிறது. தாமதமாக வரும் ஒரு கல்லூரிப் பெண்ணைப் பார்த்து ‘யாருடன் சுற்றிவிட்டு வருகிறாய்‘ என்றால் போச்சு. ‘யாரை மயக்க இவ்வளவு மேக் அப்?‘ என்ற கேள்வி பல நேரம் ஆறாத காயங்களை உண்டாக்கும்.
பேசினால் வாயாடி என்பர். பேசாவிட்டால் திமிரு என்பார்கள். என்னதான் செய்வது?
கேட்டால் நிறைய கற்கலாம். பேசினால் நமது அறியாமையை வெளிப்படுத்தலாம் என்பார் ஒரு அறிஞர்.
எதற்கெடுத்தாலும் குற்றம், குறை, குத்திக் காட்டுவது பேச்சில் அழகு ஆகாது. பலர் இன்று வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும்போது, விட்டுக் கொடுத்தல், மன்னித்து ஏற்றுக்கொள்ளல் மிக மிக அரிதாகிவிட்டது. அவநம்பிக்கையுடன் பேசுவது, நெகடிவ் ஆக பேசுவது சிலரின் வாடிக்கையாக உள்ளது.
எது சிறந்த மனநிலை
சிலர் கண்டிக்கும் பெற்றோர் மனநிலையில், சிலர் அரவணைக்கும் பெற்றோர் மனநிலையில், சிலர் பக்குவ மனநிலையில், சிலர் இயல்பான மனநிலையில், சிலர் குட்டிப் பண்டிதர் மனநிலையில், சிலர் வளைந்து கொடுக்கும் மனநிலையில், சிலர் முரண்டு பிடிக்கும் குழந்தை மனநிலையில் இருந்தும், தமது பேச்சுவார்த்தையினை மேற்கொள்கின்றனர்.
குழம்ப வேண்டாம்... இதில், பக்குவ மனநிலைதான் சிறந்தது.
- டாக்டர்.பால சாண்டில்யன்

வியாழன், 22 ஜனவரி, 2015

கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?

அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல.
2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ASER.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.
மாணவர்கள் எளிதில் மதிப்பெண்களைப் பெற வேண்டும், அதிக மாணவர்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலான பாடத்திட்டம்தான் மாணவர்களின் திறன் குறைவுக்கு முக்கியமான காரணம். பாடத்தைப் புரிந்துகொண்டு படிப்பது, கணிதத்தின் நான்கு முக்கிய அம்சங்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வது ஆகிய வற்றைவிட, தேர்ச்சி விகிதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு மாணவரால் இரண்டாம் வகுப்பு மாணவரின் பாடங் களை எளிதாகப் படிக்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் முக்கால்வாசிப் பேருக்குச் சாதாரண கழித்தல் கணக்கு தெரியவில்லை. இந்த மாணவர்கள் மேல் வகுப்புகளுக்குப் போன பிறகு இந்தத் திறன் அதிகரிப்பது ஓரளவுக்குத்தான் நடைமுறை சாத்தியமாக இருக்கிறது என்பது நமது கல்வி முறையின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
577 மாவட்டங்களில் 5,70,000 மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றுASER அறிக்கை தயாரிக்கப்பட்டி ருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியரைப் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில் 96% வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம்.
மாணவர்களின் திறன் குறைவுக்குப் பாடத்திட்டங்களும் பயிற்று விப்பு முறைகளுமே முக்கியமான காரணங்கள். அன்றாட வாழ்வில் மக்களுக்குத் தேவைப்படும் கணிதம் என்பது எண்களைப் பற்றியதும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களும்தான். அது இப்போது 9, 10-வது வகுப்பு பாடங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகும் மாணவர்களுக்காக இதர மாணவர் களுக்குக் கணிதப் பாடங்களைக் கடினமாக்குவதால் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்விச்சுமைதான் கூடும்.

திங்கள், 19 ஜனவரி, 2015

வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதுதொடர்பாக, அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு. பாலசுப்பிரமணியன், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, அகவிலைப்படி மட்டும் 107 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனவே, அனைத்துத் துறை அரசு ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு பாதுகாப்பானது அல்ல. அந்தப் பணம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்படுகிறது.

அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 80 சதவிகிதம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். பேட்டியின்போது, சங்க மாநிலத் தலைவர் கு. பால்பாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் ம. பரமசிவம், மாவட்டத் தலைவர் மு. கவியரசன் ஆகியோர் இருந்தனர்.