GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 9 ஜூலை, 2016

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவு

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் ராகுல்நாத், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்டங்கள், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகள், அதில் மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆசிரியர்களின் பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விதிகளுக்கு உட்பட்டு ஆய்வுசெய்து அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்து மாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் உத்தரவிட்டார்.

வரும், 12 மற்றும் 13ம் தேதிகளில், தேசிய அளவில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம

வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து, வரும், 12 மற்றும் 13ம் தேதிகளில், தேசிய அளவில், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியுடன், திருவாங்கூர், ஐதராபாத், பட்டியாலா, பிகானிர், ஜெய்ப்பூர் ஆகிய, ஐந்து துணை ஸ்டேட் வங்கிகளை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து, வரும் 12ம் தேதி, ஐந்து துணை வங்கிகளில் நாடு முழுவதும் பணிபுரியும், 45 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கிகள் இணைப்பு, ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம், பெரு முதலாளிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்காதது போன்றவற்றை கண்டித்து, 13ம் தேதி, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும், மூன்று லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க துணை பொதுச் செயலர் செந்தில் கூறுகையில், ''எங்கள் வங்கியுடன், மற்ற வங்கிகள் இணைப்பை கண்டித்து, அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில், ஜூலை, 29ல் நடக்கும் போராட்டத்தில், நாங்களும் பங்கேற்கிறோம்,'' என்றார்.

இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள

இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.

தொடக்கக் கல்வியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாட புத்தகங்களில் 40 மனப்பாடப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப்பில் ஆடியோ- வீடியோ வடிவில் இசை தொகுப்பாக தயாரிக்க, எஸ்.இ.ஆர்.டி., நடவடிக்கை எடுத்தது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆர்வமுள்ள இசை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக இசை தொகுப்பு தயாரிக்கப்பட்டது. இதில் மனப் பாடப் பாடல்களில் வரும் பொருள், வரிகள்,

அமைவிடம் கலாசார பின்னணியுடன் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்களுக்கு ஏற்ப நடனமாடும் மாணவ, மாணவியர் அனைவரும் அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்

பட்டுள்ளது. மாணவர்கள் மனதில் பாடல் எளிதில் பதியும் வகையில் இசை, காட்சி அமைப்பு, படப் பிடிப்பு இடங்கள் என நுாறு சதவீதம் திரைப்படப் பாடல் பின்னணி யில் படமாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இசை தொகுப்பின் படப்பதிவு இயக்குனர் அமலன் ஜெரோம் கூறியதாவது:

எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் முயற்சியில் இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டு

உள்ளது. 'அச்சம் தவிர்' என்ற பாரதியாரின் பாடலில் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லம் தொடர்பான காட்சிகள் பின்னணியில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இதுபோல் பாடல்களில் இடம் பெற்ற வரிகளுக்கு அதன் வரலாற்று பின்னணி தேவைப்படும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட இடங்களிலேயே பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆகஸ்டில் முதல்வர் ஜெயலலிதா இத்தொகுப்பு சி.டி.,யை வெளியிடுகிறார். அதன்பின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்றார்.

தமிழக அரசின், '104' சேவை மையத்தில், யோகா குறித்து ஆலோசனை

தமிழக அரசின், '104' சேவை மையத்தில், யோகா குறித்து ஆலோசனை தரும் சேவை துவங்கி உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமை என, வாரத்தில் இரு நாட்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். நிகழ்வு துவங்கிய முதல் நாளில், 1,160 பேர் பயன் பெற்றுஉள்ளனர்.

தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனை தரும், '104' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச யோகா தினத்தன்று, யோகா, இயற்கை மருத்துவம் குறித்து ஆலோசனை தரும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 'செவ்வாய், வெள்ளிக்கிழமை என, வாரத்திற்கு இரு நாட்கள், யோகா, இயற்கை மருத்துவம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்' என, '104' சேவை மையம் அறிவித்தது. நேற்று முதல், இந்த சிறப்பு ஆலோசனை சேவை துவங்கியது. சென்னை, அரும்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த யோகா, இயற்கை மருத்துவ டாக்டர்கள், இருவர் ஆலோசனை வழங்கினர். 'நேற்று மட்டும், 1,160 பேர் ஆலோசனை பெற்றுள்ளனர். எதிர்பார்த்ததை விட, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது' என, சேவை மையம் தெரிவித்து உள்ளது.

சேலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் தற்காலிக பயிற்றுனர் பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சேலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் தற்காலிக பயிற்றுனர் பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கலெக்டர் சம்பத் கூறியிருப்பதாவது: அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள சுருக்கெழுத்து மற்றும் செயலக பயிற்சி எனும் தொழிற்பிரிவுக்கு, தற்காலிக தொகுப்பூதிய பயிற்றுனர் பதவி நிரப்பப்பட உள்ளது. 

விண்ணப்பதாரர் ஆங்கில சுருக்கெழுத்தில், முதுநிலை தேர்ச்சி பெற்று, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். முற்றிலும் தற்காலிகமான இந்த பணிக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். விரும்புவோர், தங்களை பற்றிய முழு விவரங்களுடன் ஜூலை, 15ம் தேதி மாலை, 5 மணிக்குள், முதல்வர்,அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், சேலம்-8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு, 0427-2403787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, ஓராண்டிற்கான ஆரம்பகட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனப்படும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, ஓராண்டிற்கான ஆரம்பகட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி முகாம் ஆக., 1ல் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை, 11 முதல் கிடைக்கும். ரூ.500 ஊக்கத்தொகை

இது குறித்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கான மண்டல வேலை வாய்ப்பு அலுவலர்

எஸ்.கே.ஷா கூறியதாவது: மத்திய அரசின், தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான, வேலை வாய்ப்பு, பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான, ஆரம்பக்கட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி முகாம், ஆக., 1ம் தேதி துவங்குகிறது. ஓராண்டு நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி, ஐ.டி.ஐ., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், 'இன்ஸ்டுமென்டேஷன்' படித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்க வேண்டும். அறிவியல் பாடம் இல்லாமல் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பயிற்சியின் போது, கூடுதல் வகுப்புகள் நடத்தப்படும்.

விண்ணப்பங்கள் இலவசம்: சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டட வளாக அலுவலகத்தில், ஜூலை 11ம் தேதி முதல், 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பத்துடன் கல்லுாரி, கல்வி, ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ், இரண்டு புகைப்படம் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை 29ல், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, பயிற்சிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு எஸ்.கே.ஷா கூறினார்.

மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்'

மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இணையாக, பாரா மெடிக்கல் எனப்படும், துணை மருத்துவ படிப்புகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., பட்டப்படிப்புகளில், 'நர்சிங், பிசியோதெரபி, ரேடியாலஜி, ஸ்பீச் ஆடியோலஜி, லாங்குவேஜ் பெத்தாலஜி, ரேடியோ தெரபி, ஆக்குபேஷன் தெரபி' உள்ளிட்ட, ஒன்பது விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள்; 150 சுயநிதி கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்புகளுக்கு, 8,000 இடங்கள் உள்ளன. படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், பிளஸ் 2 முடித்த, அறிவியல் பிரிவு மாணவர்களின் முக்கிய தேர்வாக, இது உள்ளது. வழக்கமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிந்ததும், இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும். முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தும், இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கவில்லை.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஓரிரு நாளில், விண்ணப்ப வினியோகம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்; ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.

வெள்ளி, 8 ஜூலை, 2016

கல்வியில் புதுமை இல்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்க வைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

கல்வியில் புதுமை இல்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்க வைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்தபஜார் பத்திரிகை குழு ஏற்பாடு செய்த ‘இன்ஃபோகாம் 2016’ நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர் கூறியதாவது:

சாராம்சமாக, கிளர்ச்சியின் விளைவே புதுமை. ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளைக் கொள்கைகளை தக்கவைப்பதற்கு எதிராக செயல்படவில்லையெனில் அதனை எதிர்க்கவில்லையெனில் எந்த புதுமையையும் கொண்டு வர முடியாது. மோடி அரசு கல்வியில் புதுமை புகுத்த கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியக் கல்வித்துறையில் புதுமை இல்லாததற்குக் காரணம் என்ன? நாம் கேள்விகள் கேட்க அனுமதிக்கவில்லை. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுக்க விரும்பவில்லை. பள்ளியில் மாணவர்கள் கேள்வி கேட்டால் நாம் உட்கார் என்று தடை போடுகிறோ. இது இப்படியே தொடர்வது கூடாது. கேள்வி கேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம். குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும்.

குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதித்தால் புதுமை தானாகவே விளையும். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும். 

பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த வளர்ச்சி இயற்கையை எதிர்மறையாக பாதிக்காது, மாறாக அனைவருக்கும் முன்னேற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டது இதற்கு புதுமை புகுவது அவசியம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி ஊடகத்துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புதிய கருத்துகளின் விளைவே மாற்றம். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம், ஆனால் நேர்மறையாகச் சிந்திக்க வெண்டும் புதுமை குறித்து நம் பார்வைகளை கூர்மையாக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்போர் 83.33 லட்சம்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்போர் 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள். 4.71லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். 6.47 லட்சம் பேர் ஆசிரியர்கள். 4.49 லட்சம் பேர் கலை பிரிவினர். 6.07லட்சம் பேர் அறிவியல் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் 2.66 லட்சம் பேர் ஆவர். பட்ட மேற்படிப்பு முடித்த இன்ஜினியர்கள் 2.31 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு .சந்தா தொகை 180 ரூபாய் ஆக உயர்வு

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:2020ம் ஆண்டு வரை நீட்டித்து ஜெ., உத்தரவு

சென்னை:அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த, 2012ல் இருந்து, நான்கு ஆண்டு காலத் திற்கு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், அரசு பணியாளர்களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூன், 30ம் தேதி முடிவடைந்தது. 

கூடுதல் பயன்
எனவே, ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு, அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, சில கூடுதல் பயன் களுடன் செயல்படுத்த, முதல்வர் உத்தர விட்டுள்ளார்.அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையை பின்பற்றி, 
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்தப்புள்ளி கள் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் குழு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்து உள்ளது.

நான்கு லட்சம்

அரசு பணியாளர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள, காப்பீட்டுதிட்டத்தை விட, புதிய காப்பீட்டு திட்டம், சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது. அவை:
* நான்கு ஆண்டுகளுக்கு அரசு பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவ காப்பீட்டுத் தொகை, நான்கு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட, குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதி, 7.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
* அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம், 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள், வயது வரம்புமின்றி, இத் திட்டத்தில் பயன்பெறலாம்
* இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை, விபத்து காரணமாக, அவசர சிகிச்சையாக, அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டாலும், பணியாளர் பயன்பெற முடியும்
* அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத் தினர், நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப் பீட்டு பலன்களை பெற முடியும்
* அரசு பணியாளர்கள் சந்தா தொகையாக, மாதம், 180 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தன் பங்காக, 17.90 கோடி ரூபாயை ஆண்டு தோறும், காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும் 
* இத்திட்டம் மூலம், 10.22 லட்சம் அரசு பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாஅறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைப்பு


மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும்; அடிப்படை ஊதியத்தை, 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டு போராட்ட குழு, ஜூலை, 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

இதனால், அலுவல்கள் தடைபட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உருவாகியது. இந்த நிலையில், மத்திய அரசின் புதிய அறிவிப்பை ஏற்று, நான்கு மாதங்களுக்கு போராட்டத்தை ஒத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர், நேற்று அறிவித்தனர்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: ரயில்வே, பாதுகாப்பு, தபால் மற்றும் வருமான வரி உள்ளிட்ட பல மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த, 33 லட்சம் பேர், தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக இருந்தது. எங்களின் தற்போதைய அடிப்படை ஊதியம், 15 ஆயிரத்து, 750 ரூபாய்; அதை, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, ஊதிய குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், 2,250 ரூபாய் மட்டுமே கூடுதலாக கிடைக்கும்.

மத்திய அமைச்சரவை செயலரை சந்தித்து, போராட்ட அறிவிப்பு கடிதத்தை ஜூன், 9ல் கொடுத்தோம். ஜூன், 30ம் தேதி, மத்திய நிதித் துறை, ரயில்வே மற்றும் உள்துறை அமைச்சரை, போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது, 'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றால், ஒரு கமிட்டியை அமைத்து, அடிப்படை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை, 6ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மீண்டும் சந்தித்து பேசினர். அப்போது, எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.

அதை எழுத்து பூர்வமாக தர கேட்டோம். அதை ஏற்ற அவர், 'ஊதிய உயர்வு பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்படும்; நான்கு மாதங்களுக்குள், புதிய ஊதியம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்' என, உறுதி அளித்தார். அதை உறுதி செய்யும் வகையில், நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை ஏற்று, போராட்டத்தை, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம்

வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3ம் தேதி, பிளஸ் 1, பிளஸ் 2

மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு, பின் கோஷ்டி மோதலாக மாறியது.

இதற்கு சம்பந்தமே இல்லாத, செங்கல்பட்டு கலைக்கல்லுாரி மாணவர் கணபதி என்பவர், பிளஸ் 2 மாணவர்கள் மூவரை தாக்கியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கணபதியை கைது செய்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை, ஆசிரியர்கள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இருப்பினும், மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து, நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, 4ம் தேதி, மீண்டும் இருதரப்பு மாணவர்களும், வகுப்புகளை புறக்கணித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால், கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் போலீசார், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இருதரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார், தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மற்ற ஒன்பது ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பொன்.குமார் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, மத்திய அரசின்'உதான்' என்ற திட்டம்

பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்புகளில் சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

இதில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மாநில அரசு பாடத்திட்ட மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 1 படிக்கும் போதே, இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இரு ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது. அவர்கள், உதான் திட்ட வகுப்புகளில், கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். ஆன்-லைன் வழியாகவும், நேரடியாகவும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், 'டேப்லெட்' இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களை தெளிவுபடுத்த, 'ஹெல்ப் லைன்' வசதியும் உண்டு.

இதில் பயன்பெற விரும்பும் மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்; கணிதம், அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு சேர விரும்பும் மாணவியருக்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 4ம் தேதி துவங்கியுள்ளது.

வரும் 13ம் தேதி வரை, www.cbseacademic.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.