இந்தியாவில், 50 பள்ளிகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இதற்காக பள்ளி அள வில், மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை துவக்க,இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வெலாசஸ் கன்சல்டிங் என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், வெலாசஸ் கன்சல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி சங்கரன்செட்டூர், இத்திட்டத்தை துவங்கி வைத்தார்.அவர் கூறியதாவது: உயர்க்கல்வியில் கற்கும் கணினி தொடர்பான பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். நாம் கணினி, சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருகிறோம்; ஆனால், அவற்றை உருவாக்குவோராக இருப்பதில்லை. சாப்ட்வேர் உருவாக்குபவர்களாக மாணவர்களை மாற்ற உள்ளோம்.
இதற்காக, இந்தியா வில், 50 பள்ளிகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவியுடன் கணினி கல்வி வழங்க முடிவெடுத்துள்ளோம். இதில் மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். உலக அளவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கல்வியை வழங்கி வருகிறது.
இதில், ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். உயர்க்கல்வி,வேலைவாய்ப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மைக்ரோசாப்ட் மென்பொருளின் பதிவேற்றங்கள் குறித்த பயிற்சி உடனுக்குடன் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.