செவ்வாய், 15 செப்டம்பர், 2015

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தகுதியான அனைவருக்கும் வாக்குரிமையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் வரும் இன்று முதல் தொடங்குகிறது.
 1.1.2016-ஐ தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நடைபெறவுள்ளது.  
  வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயரை நீக்கம் செய்ய, திருத்தங்கள் செய்ய சட்டப்பேரவை தொகுதிக்குள் மாற்றம் செய்ய உரிய படிவங்களை வாக்குச் சாவடி மையங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
இதற்காக வரும் 16 மற்றும் 30-ஆம் தேதிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் படித்துக் காட்டப்பட உள்ளது.
படிவங்களைப் பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அளிக்கவும் வரும் 20 மற்றும் அக்டோபர் 4-ஆம் தேதி வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
  1.1.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு  இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இச்சிறப்பு சுருக்க முறைத் திருத்தக் காலத்தில் பெறப்படும் படிவங்களின் பேரில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2016 ஜனவரி 11 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.