வெள்ளி, 18 செப்டம்பர், 2015

144 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செவிலிய மாணவிகள் கடும் எதிர்ப்பு

சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் 144 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாகக் கூறி, அதற்கு செவிலிய மாணவிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்படும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள வளாகத்தில் 1871-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முதன்முதலில் செவிலிய பட்டயப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு வகுப்புகள் மற்றும் விடுதியறைகள் அதே வளாகத்தில் கட்டப்பட்டன.
 இடப்பற்றாக்குறை: அதன் பின்பு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு பி.எஸ்.சி. செவிலியர், எம்.எஸ்.சி. செவிலியர், போஸ்ட் பி.எஸ்.சி மாணவர்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வந்தன. அதையடுத்து எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவிகள் அதே வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் செவிலிய மாணவிகள் போதிய இடமில்லாமல் சிரமப்பட்டனர். செவிலிய பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கு விடுதி அறைகளிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன. 


 இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு பழைய சிறை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டதும், மருத்துவ மாணவிகளின் விடுதி அங்கு மாற்றப்பட்டது. பயிற்சி மருத்துவர்கள் 75 பேர் மட்டும் அதே விடுதியில் தங்கி வந்தனர். 
 அவர்களும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டனர்.
 மீண்டும் பிரச்னை: இந்த நிலையில், பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போதிய இட வசதி இல்லை. எனவே முதலாமாண்டு மாணவர்களை விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி மூத்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மருத்துவ மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்த பி.பார்ம் மாணவர்கள் செவிலிய பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
 செவிலிய மாணவிகள் இருக்கும் பகுதியில் மாணவர்களைத் தங்க வைப்பதற்கு விடுதி மாணவிகள் தரப்பில் இருந்தும், ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
 வேறு இடம்: இந்த நிலையில் செவிலியர் பயிற்சிப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றப் போவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள செவிலியர் விடுதிக்கு இந்தப் செவிலியர் பயிற்சிப் பள்ளியை மாற்றப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாணவிகள், ஆசிரியர்கள் கூறியது:
 இங்கு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் 600 பேர் உள்பட சுமார் ஆயிரம் பேர் உள்ளனர். செவிலியர் பயிற்சிப் பள்ளியை எழும்பூருக்கு மாற்றினால், அங்கிருந்து மருத்துவமனை பணிக்கு வரும் செவிலிய மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவமனைக்கு அருகில் இருந்தால்தான் மருத்துவமனை, கல்லூரி, விடுதி, இரவுப் பணி என மாறி மாறி அவர்களால் செல்ல முடியும்.
 பழைய மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே செவிலிய மாணவிகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படும் என்று ஏற்கெனவே எழுத்துப்பூர்வ உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் அதைச் செயல்படுத்தாமல் வேறு இடத்துக்கு மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.