நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
- நடப்பாண்டில், ஐந்து தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்; 39 பகுதிகளில், புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்; இவற்றுக்கு, 78 ஆசிரியர் நியமிக்கப்படுவர்
- அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 770 கூடுதல் வகுப்பறைகள், 56 கோடி ரூபாயில் கட்டப்படும்
- ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க, பெரம்பலுார், கோவையில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் துவங்கப்படும்
- கடலுார், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலுார், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில்,தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி பெற, ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் துவங்கப்படும்
- பார்வையற்ற, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, &'ப்ரெயில்&' பாடப் புத்தகமும்,பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, உருப் பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்களும் வழங்கப்படும்
- கோவை, மதுரையில் ஆசிரியர்கள் தங்கிச் செல்ல, ஆறு கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும்
- தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2003 மார்ச் 31ம் தேதிக்கு முன், பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின், பி.எப்., கணக்குகள், மாநில கணக்காயர் பராமரிப்புக்கு மாற்றப்படும்; இதன்மூலம், 1.19லட்சம் ஆசிரியர்கள் பலன் பெறுவர்
- தரம் உயர்த்தப்பட்ட, 1,054 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாய் செலவில், கூடுதல் பள்ளி கட்டடங்கள் கட்டப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.