சனி, 19 செப்டம்பர், 2015

சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

 இதன் காரணமாக, தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு இந்தக் கல்லூரியில் இருந்து 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 35 எம்.பி.பி.எஸ். இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, மத்திய தொழிலாளர் நலத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
 சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக இந்தக் கல்லூரியின் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 
 நிகழ் கல்வி ஆண்டில் சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.